மின்சார வாரிய அதிகாரியின் மனைவி மகனுடன் பலி; 7 பேர் படுகாயம்


மின்சார வாரிய அதிகாரியின் மனைவி மகனுடன் பலி; 7 பேர் படுகாயம்
x

கார்கள்-வேன் ேமாதிய கோர விபத்தில் மின்சார வாரிய அதிகாரியின் மனைவி, மகனுடன் பலியானார்.

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரம் அருகே கார்கள்-வேன் ேமாதிய கோர விபத்தில் மின்சார வாரிய அதிகாரியின் மனைவி, மகனுடன் பலியானார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

இந்த விபத்து குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோர விபத்து

ஈரோடு ஆர்.கே.வி. நகர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 50). மின்சார வாரிய உதவி இயக்குனர். அவரது மனைவி தேவி(47). அவர்களது மகன் சரவணன் (17), மகள் சவுமியா தேவி (19). திருமூர்த்தி தனது குடும்பத்துடன் பழனிமுருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். அதன்படி திருமூர்த்தி, தேவி, சரவணன், சவுமியா தேவி ஆகிய 4 பேரும் ஒரு காரில் பழனி சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து அதே காரில் ஈரோடு திரும்பினர். காரை திருமூர்த்தி ஓட்டினார். இவர்களது கார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழனி-தாராபுரம் சாலையில் மணக்கடவு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஓலப்பாளையம் சங்கனன்மேடு பகுதியை சேர்ந்த ஆனந்தன் (38), அவரது மனைவி அபிராமி (33), மகன் அஜய் (5) மகள் ஹன்சிகா (10), அவர்களது உறவினர் லலிதா ஆகியோருடன் மற்றொரு காரில் தாராபுரம் வழியாக பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை ஆனந்தன் ஓட்டினார்.

மோதல்

இந்த நிலையில் திருமூர்த்தி ஓட்டி வந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே ஆனந்தன் ஓட்டி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. அப்போது ஆனந்தன் ஓட்டி வந்த காருக்கு பின்னால் ராசிபுரத்தில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று, ஆனந்தன் ஓட்டி வந்த கார் மீது மோதி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் கார்கள் இரண்டும் அப்பளம் போல் நொறுங்கியது. சுற்றுலா வேனின் முன்பக்கமும் பலத்த சேதம் அடைந்தது.

தாய்-மகன் பலி

இந்த கோர விபத்தில் சரவணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த திருமூர்த்தி, தேவி, சவுமியா தேவி மற்றும் மற்றொரு காரில் சென்ற ஆனந்தன், அபிராமி, அஜய், ஹன்சிகா, லலிதா ஆகியோர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அந்த பகுதி பொதுமக்களும், அலங்கியம் போலீசாரும் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றி தேவியும் இறந்தார். மற்ற அனைவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பழனி-தாராபுரம் சாலையில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தின் காரணமாக தாராபுரம்-பழனி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். தாராபுரம் அருகே நடந்த இந்த கோர விபத்தில் தாய்- மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




Next Story