2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை
அன்னவாசல் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மன உளைச்சல்
அன்னவாசல் அருகே உள்ள விசலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினை காரணமாக மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையலுக்கு வைத்திருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்து கொண்டார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதில் உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மகேஸ்வரியின் தந்தை சண்முகம் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.