மேல்தளம் இடிந்து விழுந்து தாய்-மகன் பலி: வீட்டின் உரிமையாளர் கைது
மேல்தளம் இடிந்து விழுந்து தாய்-மகன் பலி: வீட்டின் உரிமையாளர் கைது
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் தர்கா வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜாகீர் உசேன் (வயது 45). பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாரம்மா (34). இவர்களுடைய மகன் முகமது அஸ்தக் (13). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஈரோட்டில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை ஜாகீர் உசேனின் வீட்டின் மேல் தளம் இடிந்து, தூங்கி கொண்டிருந்த சாரம்மா, முகமது அஸ்தக் மீது விழுந்தது. இதில் தாய், மகன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தியதில், 60 ஆண்டுகள் பழமையான வீட்டினை முறையாக பராமரிக்காமல் இருந்ததால், மேல் தளத்தில் தண்ணீர் தொடர்ந்து தேங்கியதன் காரணமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீட்டினை முறையாக பராமரிக்காமல் உயிரிழப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளரான ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஏ.ஓ.கே. நகரை சேர்ந்த முகமது யாசர் (43) மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.