தாய் மண் யாத்திரை: மாவீரன் பொல்லான் நினைவிடத்தில் மண் எடுக்கும் நிகழ்ச்சி


தாய் மண் யாத்திரை:  மாவீரன் பொல்லான் நினைவிடத்தில்   மண் எடுக்கும் நிகழ்ச்சி
x

மண் எடுக்கும் நிகழ்ச்சி

ஈரோடு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் சார்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த ஊர்களில் இருந்து மண் எடுக்கும் நிகழ்வு ஈரோட்டு மண்ணில் நேற்று தொடங்கியது. அதன்படி சென்னிமலையில் திருப்பூர் குமரன் நினைவு இடத்திலும், ஓடா நிலையில் தீரன் சின்னமலை நினைவு இடத்திலும், அறச்சலூர் நல்லமங்காபாளையத்தில் மாவீரன் பொல்லான் நினைவு இடத்திலும் மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவீரன் பொல்லான் நினைவிடத்தில் அவருடைய உருவப்படத்திற்கு திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, லிங்குசாமி, சித்ரா லட்சுமணன், சீனி ராமசாமி, மித்ரன் ஜவகர், அருண் ராஜா காமராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாவீரன் பொல்லான் நினைவிடத்தில் இயக்குனர் ரவி மரியா மண் எடுத்தார். மேலும் அவர் பொல்லான் வீர வரலாற்றை நினைவு கூர்ந்தார்.

முன்னதாக மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் இயக்குனர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, மாவீரன் பொல்லான் வரலாற்று புத்தகத்தை வழங்கினார். நல்லமங்காபாளையம் ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து இயக்குனர்களை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் சண்முகம், ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ஆறுமுகம், தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்சுந்தரம், பொல்லான் பேரவை மாவட்ட தலைவர் கண்ணையன், அருந்ததியர் விடுதலை முன்னணி மாவட்ட தலைவர் என்.டி.ஆர்.நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் ராஜசேகர் செய்திருந்தார்.


Next Story