விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும்-கலெக்டரிடம் தாயார் கோரிக்கை
விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்குடி சிறுவனை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று தாயார் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்குடி சிறுவனை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று தாயார் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
மனு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 50). இவரது மனைவி விஜயலெட்சுமி(45). இவர்களுக்கு 2 மகன்கள். இவரது 2-வது மகன் ரோஷன் ராஜ்(11). இவன் தற்போது தசைநார் சிதைவு நோய் என்ற விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறு சிறிதாக உடல் தசைகள் சுருங்கி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இந்த நோயிக்கு தற்போது, அவருடைய பெற்றோர் மும்பையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 மாதத்திற்கு ஒரு முறை இவருக்கு ரூ.1½ லட்சம் செலவு செய்து மாத்திரைகள் வாங்க வேண்டும். ரோஷன் ராஜின் தந்தை பெயிண்டர் ஆக வேலை பார்க்கிறார். வறுமை நிலையில் உள்ள இவருடைய தாயார் தற்போது தன்னுடைய மகனை காப்பாற்ற உதவி கேட்டு சிவகங்கையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிரமப்படுகிறோம்
என்னுடைய மகனுக்கு வந்த இந்த நோய் அதிசயமான நோயாகும். அவனுடைய 8 வயதில் பள்ளிக்கூடத்திற்கு வேனில் ஏற்றச் சென்றபோது ஏற முடியாமல் அவன் சிரமப்பட்டான். இதைத் தொடர்ந்து அவனுக்கு இடுப்பிற்கு மேல் வீக்கம் ஏற்பட்டது. அவனை டாக்டரிடம் அழைத்து சென்ற போது இது போன்ற நோய் இருப்பது தெரிந்தது. இதற்காக எங்களிடமிருந்த அனைத்து பணத்தையும் செலவிட்டு விட்டோம். தற்பொழுது குடும்பத்தை நடத்துவதற்கும் வைத்தியம் பார்ப்பதற்கும் பணமில்லாமல் சிரமப்படுகிறோம் எனவே மாவட்ட கலெக்டரிடம் என் மகனுடைய மருத்துவ செலவிற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அத்துடன் எனக்கு ஒரு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்