மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு; நண்பர் கைது
சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் காந்திநகர் 6-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்ன ஈஸ்வரன் மகன் முத்துக்குட்டி (வயது 30), காந்திநகர் 1-வது தெருவை சேர்ந்தவர்கள் முருகன் மகன் சண்முகராஜ் (27), முருகன் மகன் மகேஷ் (34). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சண்முகராஜின் உறவுக்கார பெண்ணிடம் முத்துக்குட்டி பேசியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சங்கரன்கோவில் பொட்டல் பகுதியில் முத்துக்குட்டி நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சண்முகராஜ் மற்றும் மகேஷ் எப்படி எங்கள் உறவுக்கார பெண்ணிடம் பேசலாம் என அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே முத்துக்குட்டியை அடித்து உதைத்து அவருடைய மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்தனர். தப்பி ஓடிய மகேசை தேடி வருகின்றனர்.