டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: தி.மு.க. பிரமுகர் சாவு


டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: தி.மு.க. பிரமுகர் சாவு
x

கங்கைகொண்டான் அருகே துக்க வீட்டுக்கு சென்றபோது, டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலியானார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கங்கைகொண்டான் அருகே துக்க வீட்டுக்கு சென்றபோது, டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலியானார்.

பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய மகன் பட்டுராஜா (வயது 38). இவர் பந்தல் அலங்கார தொழில், சமையல் பாத்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். தி.மு.க. பிரமுகரான இவர் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராகவும் இருந்தார்.

இவருடைய உறவினரான கயத்தாறு அருகே அய்யனாரூத்தைச் சேர்ந்த பூல்பாண்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே துக்கம் விசாரிப்பதற்காக பட்டுராஜா நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் அய்யனாரூத்துக்கு புறப்பட்டார். அப்போது அவர், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த உறவினரான அந்தோணிகுமாரையும் (42) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே துறையூர் நாற்கர சாலையில் சென்றபோது, அந்த வழியாக மின்கம்பங்களை ஏற்றிச் சென்ற டிராக்டரின் மீது எதிர்பாராதவிதமாக ேமாட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பட்டுராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்தோணிகுமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த பட்டுராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பட்டுராஜாவுக்கு நம்பி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story