மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; மெக்கானிக் பலி


மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; மெக்கானிக் பலி
x

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் மோட்டார் சைக்கிள்-மொபட் மோதலில் மெக்கானிக் பலியானார்.

வேலூர்

வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் கவுசிக் (வயது 18), மெக்கானிக். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நண்பருடன் கொணவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோட்டை சுற்றுச்சாலை காவலர் மண்டபம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மொபட்டில் வந்த 2 பெண்களும், கவுசிக் மற்றும் அவனுடைய நண்பர் என்று 4 பேரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். இதற்கிடையே இந்த விபத்தை கண்ட ஆட்டோ டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்தார். அதனால் நிலைதடுமாறிய ஆட்டோ சிறிதுதூரத்தில் சரிந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் பயணம் செய்த 4 பேருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவுசிக்கை பரிசோதித்த போது அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. மற்ற 3 பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story