வேலூரில் மோட்டார்சைக்கிளை திருடி பெரணமல்லூரில் பதுக்கி வைப்பு
வேலூரில் மோட்டார்சைக்கிளை திருடி பெரணமல்லூரில் பதுக்கி வைக்கப்பட்டது. இதனை ஜி.பி.எஸ். கருவி மூலம் மீட்டனர்.
வேலூர்
வேலூரில் மோட்டார்சைக்கிளை திருடி பெரணமல்லூரில் பதுக்கி வைக்கப்பட்டது. இதனை ஜி.பி.எஸ். கருவி மூலம் மீட்டனர்.
மோட்டார்சைக்கிள்
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிள் வைத்துள்ளார். அதனை தினமும் வீட்டின் அருகே நிறுத்துவது வழக்கம்.
அத்துடன் பாதுகாப்பு கருதி மோட்டார்சைக்கிளில் யாருக்கும் தெரியாத வகையில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி அதனை செல்போன் செயலி மூலம் கண்காணிக்கும் வகையில் இணைத்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல மோட்டார்சைக்கிளை தெருவோரத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் காணாமல் போய் இருந்தது.
இரவில் மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளை திருடியது அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் செல்போனை எடுத்து மோட்டார்சைக்கிள் இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ். உதவியுடன் தேடினார்.
அப்போது அந்த வாகனம் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே நாவல்பாக்கம் ஏரிப்பகுதியில் உள்ள முட்புதர் நிறைந்த மைதானத்தில் கிடப்பதாக காண்பித்தது.
மீட்பு
அதைத்தொடர்ந்து பெரணமல்லூருக்கு தனது நண்பர்களுடன் சென்று அங்குள்ள பெரணமல்லூர் போலீசார் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் மோட்டார்சைக்கிளை அந்த வாலிபர் தேடினார்.
அந்த வாகனம் முட்புதரில் மறைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார்சைக்கிளை அந்த வாலிபர் மீட்டார்.
அதை மறைத்து வைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.