தக்கலை பஸ் நிலையம் முன்பு பஸ்சின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள்
தக்கலை பஸ் நிலையம் முன்பு பஸ்சின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள்
தக்கலை,
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் காலை 7.30 மணியளவில் தக்கலை பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிவிட்டு வெளியேறிய போது எதிர்பாராதவிதமாக நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் தூக்கிவீசப்பட்டு எதிரே வந்து கொண்டிருந்த இன்னொரு அரசு பஸ் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் அடியில் சிக்கி கொண்டது. அதை ஓட்டி வந்த 44 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் சாலையின் வலது பக்கம் தூக்கி வீசப்பட்டார். மேலும், அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார். இதனால், அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.