மோட்டார் சைக்கிள்- லாரி நேருக்கு நேர் மோதல்; வாலிபர் சாவு - டிரைவர் தப்பி ஓட்டம்
மோட்டார் சைக்கிள்- லாரி நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
திருவள்ளூர் அடுத்த பள்ளிப்பட்டு கீழ்நெடுங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சூசைகுமார் (வயது 23). சூசைகுமார் திருவள்ளூர்-ஆவடி சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணம் கலெக்சன் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சூசைகுமார் மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் ஒண்டிக்குப்பம் பகுதியில் பணம் கலெக்சன் செய்ய சென்று கொண்டிருந்தார்.
அவர் மணவாளநகர் பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூசைகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதையடுத்து லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து சந்திரன் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து சூசைக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.