மோட்டார் சைக்கிள்கள், மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்
டயர் வெடித்ததில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள்கள், மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது
ஜோலார்பேட்டை
கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர் (வயது 52), சக்திவேல் (40). இவர்கள் நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய காரில் சென்றனர்.
அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாபதி மகன் சந்திரகுமார் (38) காரை ஓட்டிச் சென்றார். தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பினர். நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஏழுரைப்பட்டி பகுதியில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி சாலையோரம் உள்ள மரத்தில் மோதி நின்றது.
இதில் காரில் பயணம் செய்த சந்திரசேகர், சக்திவேல் மற்றும் கார் டிரைவர் சந்திரகுமார், மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற வாணியம்பாடி அருகே வீரனமலை ஜெயச்சந்திரன் மகன் தினேஷ் (23), பின்னால் அமர்ந்து இருந்த கிருஷ்ணமூர்த்தி மகள் மஞ்சு (17), மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த அய்யன் (55) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.