மோட்டார் சைக்கிள்கள் மோதல்:தந்தை, மகள் உள்பட 4 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் மோதி்க்கொண்ட விபத்தில் தந்தை, மகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் கரையாளன் குடியிருப்பு தெருவைச் சேர்ந்த தேவதாஸ் செல்லத்துரை மகன் சுதாகர் சகாயகுமார் (வயது 51). இவரது மகள் அண்டோ ராஜ நினுசா (20). சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி அஞ்சலக கிளை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை பள்ளக்குறிச்சியிலிருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை அழைத்து வந்துள்ளார்.
அப்போது சாத்தான்குளம் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாடசாமி, (57), வீரகுமாரபிள்ளை தெருவைச் சேர்ந்த வேதநாயகம் மகன் செல்லையா (58) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் முதலூரில் இருந்து சாத்தான்குளம் நோக்கி வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை மாடசாமி ஓட்டி வந்துள்ளார்.
சாத்தான்குளம் அருகே முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வந்தபோது சுதாகர் சகாயகுமார் மோட்டார் சைக்கிள் மீது மாடசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பின்புறமாக பலமாக மோதியது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் இருந்த 4 பேரும் தூக்கியெறியப்பட்டு பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சுதாகர் சகாயகுமார், மாடசாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.