மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 வாலிபர்கள் பலி
செம்பட்டிவிடுதி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி அருகே மணவிடுதியை சேர்ந்தவர் மலையப்பன். இவருடைய மகன் முத்துச்சாமி (வயது 24), கூலிதொழிலாளி. இவர் பெருங்களூரில் இருந்து ரைஸ் மில் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த யாகப்பன் மகன் சாத்தப்பன் (20) என்பவர் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்மன்காடு அரிசி ஆலை அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது.
2 வாலிபர்கள் பலி
இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.