சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பு


சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் சாலை விரிவாக்க பணி முழுமை பெறாமல் உள்ள சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் சாலை விரிவாக்க பணி முழுமை பெறாமல் உள்ள சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இரும்பு தடுப்புகள்

கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர், ஊட்டி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டி-கூடலூர் பகுதியில் சாலைகள் விரிவாக்க பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பழமையான பாலங்களை இடித்து விட்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கூடலூர்-மைசூரு சாலையை விரிவுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் தடுப்புச்சுவர்களும் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் கூடலூர்-ஊட்டி சாலையிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் விரிவாக்க பணி முழுமை பெறாத நிலையில் அவசரகதியில் சாலையோரம் இரும்பு தடுப்புகள் வைக்கும் பணியும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

விரிவாக்க பணி

இதனால் விரிவாக்க பணியின் போது இரும்பு தடுப்புகளை அகற்றும் நிலை ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் தடுப்புகள் வீணாக வாய்ப்புள்ளது. மேலும் அவசரகதியில் வைப்பதால் அரசுக்கு செலவு ஏற்படும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வரும் சூழலில் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் இருக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் தடுப்புகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில் விரிவாக்க பணிகள் முழுமை பெறாத இடங்களில் அவசர கதியில் இரும்பு தடுப்புகள் பொருத்துவதால் மீண்டும் அதை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். பின்னர் தடுப்புகள் முறையாக பொருத்தப்படுமா என்பது கேள்விக்குறி. எனவே, சாலை விரிவாக்க பணி நிறைவு பெற்ற பிறகு இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story