பழுதடைந்த நொய்யல்-வேலாயுதம்பாளையம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
பழுதடைந்த நொய்யல்-வேலாயுதம்பாளையம் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த தார் சாலை வழியாக திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், காங்கேயம், முத்தூர், கொடுமுடி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, பழனி, பரமத்தி, சின்னதாராபுரம், ராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
அதேபோல் பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலை வழியாக இரவு, பகல் பாராமல் ஏராளமான லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், வேன்கள், கார்கள், டிராக்டர்கள் மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன ஓட்டிகள் அவதி
நொய்யல்-வேலாயுதம்பாளையம் சாலையில் இரவு நேரம் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக பிரசவ வலியால் துடிக்கும் பெண்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பழுதடைந்த சாலையால் மெதுவாக ஆம்புலன்சை இயக்கி செல்கின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பஞ்சராகி நடுவழியில் நிற்கும் வாகனங்கள்
புன்னம் சத்திரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ்:- நான் பல ஆண்டுகளாக நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலையில் லாரிகளை ஓட்டி செல்கிறேன். பரமத்தி மற்றும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து மணல், கருங்கற்கள், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு நொய்யல், வேலாயுதம்பாளையம், புகழூர், தளவாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று இறக்கி வருகிறேன். நொய்யல்- வேலாயுதம்பாளையம் வழியாக செல்லும்போது லாரி மிகவும் மெதுவாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால் நடுவழியில் டயர் பஞ்சராகி நடுவழியில் வாகனங்கள் நின்று விடுகிறது. இதன் காரணமாக லாரியில் அதிக லோடுகள் ஏற்றி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலை தடுமாறும் வாகனங்கள்
புங்கோடை காளிபாளையம் பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் சதீஷ்:- நான் புங்கோடை காளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் பல்வேறு வகையான சரக்குகளை ஏற்றி செல்வேன். சரக்கு ஆட்டோவில் பொருட்களை ஏற்றி விடுவதால் சீக்கிரமாக கொண்டு சென்று இறக்கி வந்து விடுவார்கள் என்பதால் வியாபாரிகள் சரக்கு ஆட்டோவை விரும்புகிறார்கள். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து இருப்பதால் சரக்கு ஆட்டோ மட்டுமின்றி எந்த வாகனமும் வேகமாக செல்ல முடியாமலும், நிலை தடுமாறியும் சென்று வருகின்றன. இதனால் சரக்கு ஆட்டோவில் ஏற்றப்பட்ட பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சென்று இறக்கி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அதிகமாக பொருட்களை கொண்டு செல்லவும், அதிக நடை செல்லவும் எங்களால் முடியவில்லை. மேலும், டயர்கள் அடிக்கடி பஞ்சராகி வருகிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் பழுதடைந்த தார் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.
மெதுவாக செல்லும் அவலம்
முனிநாதபுரம் பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுரேஷ்:- நொய்யல் செல்லும் சாலை வழியாக நான் டிராக்டரில் கரும்பு பாரம் ஏற்றி கொண்டு வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு கொண்டு செல்கிறேன். அதேபோல் தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்களை விற்பனைக்கு ஏற்றி செல்கிறேன். ஆனால் டிராக்டர் வேகமாக செல்ல முடியாமல் ஆடி அசைந்து மெதுவாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எந்த அதிகாரியும் பழுதடைந்த தார் சாலையை கண்டு கொள்ளவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் சரியான திட்டம் தீட்டி விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
சாலையை சீரமைக்க வேண்டும்
சேமங்கி பகுதியை சேர்ந்த விவசாயி மாரப்பன்:- இந்த தார்சாலை வழியாக வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள உரக்கடையில் இருந்து பல்வேறு வகையான உரங்களை (இடுப்பொருட்களை) வாங்கி வந்து வேளாண் பயிர்களுக்கு உரம் இட்டு வருகிறோம். அதேபோல் எங்கள் தோட்டங்களில் விளைந்த விளைபொருட்களை வாகனங்களில் இந்த சாலை வழியாக கொண்டு சென்று வருகிறோம். தார் சாலை 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை தொழிலாளர்கள் அவ்வப்போது லாரிகளில் ஜல்லிக்கற்களையும், தார்களையும் கொண்டு வந்து குழிகளை சில இடங்களில் மட்டும் அடைத்து செல்கின்றனர். ஆனால் ஏராளமான வாகனங்கள் செல்வதால் அடைக்கப்பட்ட குழிகளில் மீண்டும் குழிகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேலாயுதம்பாளையம் முதல் நொய்யல் குறுக்கு சாலை வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு பழுதடைந்துள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும்.
உடல் வலி அதிகரிப்பு
இந்த தார் சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகள் கூறியதாவது:- நொய்யல் குறுக்கு சாலை முதல் வேலாயுதம்பாளையம் வரை 15 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வேன் மற்றும் பஸ்சில் அமர்ந்து வரும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். வாகனங்களை இயக்கி விட்டு இரவு நேரத்தில் நாங்கள் தூங்க செல்லும் போது உடல் வலி மிகவும் அதிகமாக உள்ளது. எனவே பழுதடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.