கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
கொள்ளிடம் ரெயில்வே கேட் பாதையில் கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் ரெயில்வே கேட் பாதையில் கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ரெயில்வே கேட்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், நல்லூர், கோதண்டபுரம், மகேந்திரபள்ளி, கொடக்கார மூலை, புதுப்பட்டினம், பழையாறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே ரெயில்வே கேட் அமைந்துள்ளது.
இதன் அருகே ரெயில் நிலையமும் உள்ளது. இந்த நிலையில் ரெயில்வே கேட் பகுதியில் கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. இந்த வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாங்கானாம்பட்டு, நல்லூர், புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்பவர்களும், பழையாறு மீன்பிடி துறைமுகத்திற்கு செல்பவர்களும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
பாதையை சீரமைக்க வேண்டும்
கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் இந்த நெடுஞ்சாலை வழியேதான் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ரெயில்வே கேட் பகுதியில் கற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இரு சக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் சிதறி கிடக்கும் கற்களால் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். எனவே ரெயில்வே கேட் பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.