வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
நாகையில் சாலையோரத்தில் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
நாகை நகர் பகுதியில் நாகை- நாகூர் சாலை போக்குவரத்துக்கு முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலையில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளதால் போக்குவரத்து நிறைந்து காணப்படும். குறிப்பாக காலை, மாலை என அலுவலக நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதனால் நாகை புதிய பஸ் நிலையம், நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி, வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் முதல் நாகூர் வெட்டாற்று பாலத்தில் புனரமைப்பு பணிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை தடை விதித்தது.
வடிகால் அமைக்கும் பணி
இதையடுத்து சென்னை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாகை, வேளாங்கண்ணி், ராமதாதபுரம் உள்ளிட்ட மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் நாகூர், நாகை வழியாக நகரப்பகுதிக்குள் வந்து செல்கிறது. இதனால் நாகை நகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெளிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நாகை போக்குவரத்து பணிமனையில் இருந்து வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையோரத்தில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டி உள்ளனர். தற்போது மழைக்காலம் தொடங்கி மழையும் கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். எனவே நாகையில் சாலையோரத்தில் நடந்து வரும் வடிகால் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
நாகையை சேர்ந்த வியாபாரி கண்ணன்:-
மழைக்காலத்தில் இதுபோல பள்ளம் தோண்டி வடிகால் அமைக்கும் பணியை நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. கான்கிரீட் அமைப்பதற்காக பள்ளத்தில் கம்பிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் பள்ளம் தோண்டப்பட்ட இடம் சகதியாக உள்ளது. சகதியில் வழுக்கி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே வியாபாரிகளின் நலன் கருதி வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
நாகையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்:-
வடிகால் அமைப்பது மக்களுக்கு பயன்உள்ளதாக இருந்தாலும், காலம் கருதி இதுபோன்ற பணிகளை செய்யவேண்டும். தற்போது மழை காலத்தில் பள்ளம் தோண்டி வடிகால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர கிழக்கு கடற்கரை சாலையில் மேம்படுத்தும் பணி நடப்பதால் அனைத்து வாகனங்களும் நாகை- நாகூர் மெயின் ரோடு வழியாக த்தான் வந்து செல்கிறது.
இதனால் நகர் பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இதுபோன்று சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டி வடிகால் அமைப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த பணிகளை சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.