வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்படும் வனத்துறையினர் எச்சரிக்கை
வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள்
வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்குகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1,435 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இது கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இங்கு யானைகள் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய்கள், புள்ளிமான்கள், கழுத்தைபுலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர் கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிப்பார்கள்.
செல்பி மோகம்
அப்போது சிலர் வாகனங்களை நிறுத்தி சாலையோரம் அதன் வாழ்விடத்தில் நடமாடும் யானை, மான் போன்ற விலங்குகளை புகைப்படம் எடுத்தும், சத்தமிட்டு்ம் வருகின்றனர். சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்பி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை துரத்தி தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பிப்பதும் வாடிக்கையாகி விட்டது.
ஆபத்தை உணராத இளைஞர்கள் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்பி எடுக்கின்றனர். சலவென ஓடும் நீரோடைகளில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதும் எல்லையை மீறிய செயலாக காணமுடிகிறது.
அபராதம்
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குனர் கிருபா சங்கர் கூறும்போது, 'இயற்கையான சூழல் கொண்ட விலங்குகள் வாழும் வாழ்விடத்தில் அத்துமீறி நுழைந்து இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனிதர்களின் தேவையற்ற செயல்களால் விலங்குகள் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது. எனவே வனப்பகுதியில் அத்துமீறும் நபர்கள் மீது அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும்' என்றார்.