மலை ரெயில் டீசல் என்ஜின் சோதனை ஓட்டம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் டீசன் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
குன்னூர்,
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் டீசன் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
மலை ரெயில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மலை ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது சுற்றுலா பயணிகளுக்காக மலை ரெயில் இயக்கப்படுகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்ட ரெயில் என்ஜின் மூலம் அதிகளவில் மாசு ஏற்பட்டது. இதனால் பர்னஸ் ஆயில் மூலம் மலை ரெயில் இயக்கப்படுவதை மாற்றியமைக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் என்ஜினாக மாற்றியமைக்கும் பணியை குன்னூர் ரெயில்வே பணிமனையில் சீனியர் டெக்னீஷியன் மாணிக்கம் என்பவர் மேற்கொண்டார்.
சோதனை ஓட்டம்
அவரது முயற்சியால் ஏற்கனவே ஒரு பர்னஸ் ஆயில் என்ஜின், டீசல் என்ஜினாக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து மாற்றப்பட்ட முதல் டீசல் என்ஜின் மூலம் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் தற்போது 2-வது பர்னஸ் ஆயில் என்ஜின் கடந்த 1½ மாதங்களாக மாணிக்கம் தலைமையில் டீசல் என்ஜினாக மாற்றும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முடிந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலை ரெயில் டீசல் என்ஜின் 2-வது சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் குன்னூர் வரை 3 பெட்டிகள், ஒரு சரக்கு பெட்டியுடன் வெற்றிகரமாக வந்து சேர்ந்தது. இதையடுத்து 2-வது டீசல் என்ஜினுடன் மலை ரெயில் விரைவில் பயணிகளுக்காக இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.