பட்டா கேட்டு மலைப்பகுதி மக்கள் போராட்டம் மலை உச்சியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
வாணியம்பாடி அருகே பட்டா கேட்டு மலைப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் மலை உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே பட்டா கேட்டு மலைப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் மலை உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலைப்பகுதி மக்கள் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ளது மலை கிராமமான தும்பேரி ஊராட்சி. இங்குள்ள அண்ணா நகர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக 19 குடும்பத்தினர் மலையடிவாரத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
தற்போது அவர்களது வம்சாவழியினர் 100-க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் காப்புக்காடு என்று திடீரென அறிவித்த வனத்துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
இதனால் கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறியும், தங்களுக்கு தொடர்ந்து அதே இடத்தில் வசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமெனவும் பதாகைகளை கையில் ஏந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
அவர்களிடம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோ.செந்தில்குமார், வாணியம்பாடி சரக வன அலுவலர் இளங்கோ, தாசில்தார் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இங்கேயே தொடர்ந்து வசிக்க வீட்டுமனை பட்டா வேண்டும் என்றும், பட்டா வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
வாலிபர் தற்கொலை மிரட்டல்
அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உணவு சமைத்து தமிழக-ஆந்திரா செல்லும் சாலையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுபற்றி அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) விஜயன் ஆகியோர் அங்கு சென்று, இது வனத்துறைக்கு சொந்தமான இடம். எனவே, போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி கூறினர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்ற போது, அப்பகுதியை சேர்ந்த சிவராஜ் என்ற வாலிபர் திடீரென்று காப்புக்காடு பகுதியில் உள்ள மலை உச்சியில் ஏறிக்கொண்டு பட்டா வழங்க வேண்டும். இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை
இதனையடுத்து அதிகாரிகள், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே அழைத்து வந்தனர். மேலும் பட்டா வழங்குவதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள், கிராம மக்களிடம் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.