கூடலூர்-கேரளா சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
கூடலூர்- கேரளா செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர்- கேரளா செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகள்
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. மேலும் முக்கிய சாலைகளில் வந்து நிற்பதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுவதால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் செல்லும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கூடலூர் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பாட்டவயல் பகுதியை கடந்து சென்ற போது சாலையின் குறுக்கே காட்டு யானை வந்து நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பான்கள் மூலம் சத்தம் எழுப்பினர். இருப்பினும் காட்டு யானை அப்பகுதியை விட்டு செல்லாமல் தொடர்ந்து நின்றிருந்தது. மேலும் சாலையின் இருபுறமும் நின்றிருந்த வாகனங்களை விரட்ட முயன்றது. இதை அறிந்த டிரைவர்கள் வாகனங்களை பின் நோக்கி இயக்கினர்.
பின்னர் 20 நிமிஷங்களுக்கு பிறகு காட்டு யானை வனத்துக்குள் சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இது குறித்து இரு மாநில வனத்துறையினர் கூறும் போது, காட்டு யானைகள் நடமாட்டம் இரவில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என எச்சரித்துள்ளனர்.