9 மாணவ, மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ். வாய்ப்பு
அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 9 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 9 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். சேர்க்கை
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பிளஸ்-1, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். இதற்காக கடந்த ஆண்டு முதல் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் மதுரை மாவட்டத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 750 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
இவர்களில் 470 பேர் அரசுப்பள்ளிகளை சேர்ந்தவர்கள். தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணாக 93 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவர்களில் 172 அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 300 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் அரசுப்பள்ளி ஒதுக்கீட்டிற்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு கலந்தாய்வு சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவ, மாணவிகளுக்கு அரசுக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான அனுமதி கிடைத்துள்ளது.
வாய்ப்பு
அவர்கள் சிவகங்கை, தேனி, விருதுநகர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், ஒரு சிலர் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களில் 3 மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு நீட் தேர்வில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்காமல், மறுபடியும் தேர்வெழுதி இந்த ஆண்டு சேர்க்கை பெற்றுள்ளனர்.
கஸ்தூரிபா காந்தி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி தீபிகா, திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தவ்பீகா நூருல்ஐன், ஈ.வெ.ரா. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரஷிகா, கலைவாணி, சசிரேகா, கருங்காலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காளீஸ்வரி ஆகியோர் முதல் முயற்சியில் வெற்றி பெற்று மருத்துவ சேர்க்கை பெற்றுள்ளனர். 2-ம் கட்ட கலந்தாய்வில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நீட் பயிற்சி வகுப்புகள்
நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த வகுப்புகளில் பயிற்சி பெற்ற அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 226 மாணவ, மாணவிகள் முதல் முறையாக நீட் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்ச்சிக்கு 113 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவர்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 21 பேர் உள்பட 68 பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் 17 பேருக்கு மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைத்தது.
2021-ம் ஆண்டு, 523 மாணவ, மாணவிகள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 108 என நிர்ணயிக்கப்பட்டது. இவர்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 100 பேர் உள்பட 182 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் 25 பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கை பெற்றனர்.
மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் தேர்ச்சி பெற்று வரும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்கிறது. இதனால், தகுதித்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் அரசுப்பள்ளி இட ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற முடியாமல் தவிக்கின்றனர்.