போராட்டத்திற்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. நேரில் ஆதரவு
கப்பியறையில் 4-வது நாளாக ெதாடர்கிறது: உள்ளிருப்பு போராட்டத்திற்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. நேரில் ஆதரவு
கருங்கல்,
கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி கடந்த 3-ந் தேதி முதல் கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டம் ெதாடங்கினர். இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்கள் அலுவலக வளாகத்திலேயே உண்டும், உறங்கியும் வருகிறார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. ஆனாலும், அலுவலக வளாகத்தில் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
போராட்டம் நடத்தி வரும் பெண் கவுன்சிலர்களை தேடி வந்த அவர்களது குழந்தைகளையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். மேலும், கவுன்சிலர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது பொதுமக்களும் திரண்டனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி நேரில் வந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் கல்குவாரிக்கு தடை விதிப்பு சம்பந்தமாக சப்-கலெக்டரிடம் பேசினார்.
இதுகுறித்து பேரூராட்சி தலைவி அனிஷா கிளாடிஸ் கூறும்போது, 'கல்குவாரியை மூடும் வரை எங்களின் இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடரும்' என்றார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பேரூராட்சி தலைவி அனிஷா கிளாடிசுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்பு இரவு மீண்டும் பேரூராட்சி அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.