குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்


குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு மானியங்களை பெற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு மானியம்

தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஊக்குவிப்பு மானியங்களை வழங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் புதிதாக தொடங்கப்படும், விரிவாக்கம் செய்யப்படும் அல்லது கடந்த ஒரு வருடத்திற்குள் தொடங்கப்பட்ட, விரிவாக்கம் செய்யப்பட்ட குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள், பிற்படுத்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகள், சிட்கோ தொழிற்பேட்டையில் ஆரம்பிக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை மாநில முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

புதிதாக ஆரம்பிக்கப்படும், விரிவாக்கம் செய்யப்படும் குறு உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தியை தொடங்கிய நாளிலிருந்து முதல் 3 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தின் மதிப்பில் 20 சதவீதம் குறைந்தழுத்த மின் மானியமாக வழங்கப்படுகிறது. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியில் 5 சதவீதம் தொழில் நிறுவனங்களுக்கு பின்முனை வட்டி மானியம் திரும்ப வழங்கப்படுகிறது. 20 பேருக்கு மேல் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள், தாங்கள் செலுத்திய ஊழியரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் ஒருவருக்கு ரூ.24 ஆயிரம் வீதம் உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து முதல் 3 ஆண்டுகளுக்கு ஊதியப்பட்டியல் மானியம் திரும்ப வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் பிற்படுத்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஆரம்பிக்கும் புதிய குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க வாங்கப்படும் நிலத்தின் மதிப்பில் பதிவுத்துறைக்கு செலுத்தப்படும் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் வரை முத்திரைத்தாள், பதிவு கட்டண மானியம் திரும்ப வழங்கப்படும். மேற்கண்ட பிரிவின் கீழ் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழக அரசு வழங்கும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146- 226602, 223616 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி (www.msmetamilnadu.tn.gov.in).

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story