மாற்று மருத்துவம் பார்ப்பவர்களை போலீசார் தொந்தரவு செய்வதாக வழக்கு: பாரம்பரிய மருந்துகள்தான் கொரோனா சிகிச்சைக்கு உதவின -மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
பாரம்பரிய மருந்துகள்தான் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பேரூதவியாக இருந்தன என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
பாரம்பரிய மருந்துகள்தான் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பேரூதவியாக இருந்தன என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
போலீசார் தொந்தரவு
மதுரை ஐகோர்ட்டில் கலைமணி உள்பட சிலர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நாங்கள் ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முடித்து சான்றிதழ் வைத்துள்ளோம். அதேபோல் ஓமியோபதி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் முதலான படிப்பும் முடித்து உள்ளோம்.
அதன் அடிப்படையில் நோயாளிகளுக்கு மாற்று மருந்தியல் மூலம் சிகிச்சை அளித்து வருகிறோம். இதை மத்திய அரசும் அங்கீகரித்துள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் மாற்று மருந்தியல் படித்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க கோர்ட்டுகள் அனுமதி வழங்கி உள்ளன.
ஆனால் தமிழகத்தில் மாற்று மருந்தியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் போலீசார் அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு அங்கீகாரம்
இது குறித்து மத்திய, மாநில சுகாதாரத்துறைகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே மாற்று மருந்தியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
நம் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்த போது, அந்த நோய்க்கு சித்தா, ஆயுர்வேதம் முதலான மாற்று மருந்தியல் சிகிச்சை மூலம் தான் தீர்வு காண ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல மாற்று மருந்தியல் பட்டப்படிப்பினை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்து உள்ளது.
பாரம்பரிய மருந்துகள்
சமீபத்தில் சித்த மருத்துவம், கபசுர குடிநீர் உள்ளிட்டவையின் பயன்பாடு குறித்து ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை வழி மொழிகிறேன்.
பாரம்பரிய மருந்துகள் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பேரூதவியாக இருந்தது. எனவே மனுதாரர்களின் மனுக்களை மத்திய, மாநில சுகாதரத் துறையினர் பரிசீலித்து 2 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.