கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் முகிலன் கைது


கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் முகிலன் கைது
x

க.பரமத்தி அருகே கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் ஈடுபட்டனர்.

கரூர்

சமூக ஆா்வலா் கொலை

கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். சமூக ஆர்வலர். இவருக்கும், செல்வக்குமார் என்பவருக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செல்வக்குமாரின் கல்குவாரி உரிமம் முடிந்தபிறகும் இயங்கி வருவதாக ஜெகநாதன் கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கல்குவாரி சட்ட விரோதமாக செயல்பட்டது தெரியவந்ததால், கனிம வளத்துறை அதிகாரிகள் அதனை மூடி சீல் வைத்தனர். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் மீது மினி லாரி ஒன்று மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமார், லாரி டிரைவர் சக்திவேல், ரஞ்சித் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

முகிலன் கைது

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜெகநாதனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஜெகநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டு உடலை பெற மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட சமூக ஆர்வலர் முகிலன், சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட முகிலன் மற்றும் சண்முகத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், ஜெகநாதனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், வேலை வாய்ப்பும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ேநற்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 13 பேர் கரூர், காந்திபுரம் ரோட்டில் சாலைமறியல் செய்தனர்.பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story