கடும் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிப்பு


கடும் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிப்பு
x

வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முல்லைப்பூ சாகுபடி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த முல்லைப்பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் இந்த பகுதியில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ விளைவிக்கப்படுகிறது.

கடும் பனிப்பொழிவு

முல்லைப்பூவை அதிகாலை எழுந்து இப்பகுதி மக்கள் தேனி போல் சுறுசுறுப்பாக செடியில் இருந்து பறித்து உள்ளூர் வியாபாரிகளிடம் வழங்குகின்றனர். பின்னர் அதனை வெளியூர் வியாபாரிகளுக்கு வேன் மூலம் பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், மாயிலாடுதுறை, தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

செடிகளில் இருந்து முல்லைப்பூக்கள் உதிர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே பூ கிடைக்கிறது.சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.600 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படும்.

விளைச்சல் பாதிப்பு

தற்போது பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை உயர்ந்து காணப்படுகிறது. பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் பூப்பறிக்கும் கூலிக்குகூட பூக்கள் விளையாததல் பல நாட்களாக பூவை பறிக்காமல் விவசாயிகள் விட்டுவிடுகின்றனர்.

இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். முல்லைப்பூ விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவியும், நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story