வாகன நுழைவு வரி பல மடங்கு உயர்வு


வாகன நுழைவு வரி பல மடங்கு உயர்வு
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கேரளா-தமிழகத்தில் வாகன நுழைவு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கேரளா-தமிழகத்தில் வாகன நுழைவு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

வரி உயர்வு

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கூடலூர், பந்தலூர் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதை சார்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரைவர்கள் உள்ளனர். இந்தநிலையில் கேரளா செல்வதற்கு வாகன நுழைவு வரி ஆன்லைனில் செலுத்த வேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

நேற்று முன்தினம் ஒரு நோயாளிக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால், கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் பெருந்தல்மன்னா ஆஸ்பத்திரிக்கு சுற்றுலா கார் சென்றது. தொடர்ந்து கேரள எல்லையில் நிறுத்தி ஆன்லைனில் பதிவு செய்தபோது, 4 மணி நேரம் கழித்து வாகன வரி செலுத்தியதற்கான ரசீது கிடைத்தது. மேலும் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வாகன ஓட்டிகள் அதிருப்தி

இதனால் நோயாளியின் குடும்பத்தினர் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் கூடலூர், பந்தலூர் பகுதியில் இருந்து கேரளா எல்லையின் நுழைவுவாயிலாக உள்ள நாடுகாணி, பாட்டவயல், தாளூர், சோலாடி, நம்பியார்குன்னு வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சுற்றுலா வாகன டிரைவர்கள், கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் முறையிட்டனர். தொடர்ந்து கேரள வாகன டிரைவர்கள் தமிழகத்துக்குள் வருவதற்கான வரியும் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால் இரு மாநில டிரைவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து புகார் மனு அளித்தனர்.

தொழில் முடங்கும்

இதுகுறித்து சுற்றுலா வாகன டிரைவர்கள் கூறும்போது, கேரளாவுக்கு செல்ல ஒரு காருக்கு ரூ.200 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.475 ஆகவும், 7 பேர் அமரும் வாகனத்துக்கு ரூ.2,235, 9 பேர் பயணம் செய்யும் வாகனத்துக்கு ரூ.2,800, பெரிய வேனுக்கு ரூ.4,100 ஆக வாகன நுழைவு அனுமதி வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு வாகன அனுமதி வரி உயர்த்தி உள்ளதால் சுற்றுலா தொழில் மேலும் முடங்கிவிடும். ஆகவே, கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரியை குறைக்க வேண்டும் என்றனர்.


Next Story