சத்தியமங்கலத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டியிருந்தால் நடவடிக்கை; நகராட்சி கூட்டத்தில் தலைவர் பதில்
சத்தியமங்கலத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் பதில் அளித்தார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் பதில் அளித்தார்.
நகராட்சி கூட்டம்
சத்தியமங்கலம் நகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் நடராஜ், பொறியாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
திருநாவுக்கரசு (பா.ம.க.) கடந்த 10 மாதங்களாக என்னுடைய வார்டில் நான் கேட்டுக் கொண்டும் எந்த பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
பொறியாளர் ரவி:- ஒவ்வொரு வார்டாக பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் கண்டிப்பாக உங்களுடைய வார்டிலும் பணிகளை மேற்கொண்டு சீரமைக்கப்படும்.
லட்சுமணன் (அ.தி.மு.க) சத்தியமங்கலத்தில் கடைவீதியில் இருந்து நிர்மலா சினிமா தியேட்டர் ரோடு செல்லும் வழியில் தனியார் ஒருவர் பெரிய கடை கட்டி இருக்கிறார். அதில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் நகராட்சி அனுமதி பெற்று கட்டப்பட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலான பகுதி நகராட்சி அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- குறிப்பிட்ட அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
புறம்போக்கு நிலம்
அரவிந்த் சாகர் (பா.ஜ.க):- தற்போது சமுதாய கூடம் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஏழைகள் குறைந்த செலவில் நிகழ்ச்சிகள் செய்ய முடிவதில்லை.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி- அது தனியார் ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. இனி நமக்கு தேவைப்பட்டால் வேறு ஒரு இடத்தில் சமுதாயக்கூடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும்.
வேலுச்சாமி (தி.மு.க) புளியங்கோம்பை செல்லும் வழியில் 58 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு விளையாட்டு மைதானம், பூங்கா போன்றவைகள் அமைக்கலாம்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- தற்போது அதில் 10 ஏக்கர் எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.