சர்க்கசுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கசுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டது
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட திருவிழந்தூர் தென்னமரச் சாலையில் பரிமள ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது.பொதுவாக சாகச காட்சிகள் மற்றும் மிருகங்களைக் கொண்டு சர்க்கஸ் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை ஆகும். மேலும் கலெக்டர் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதி செய்த பின்னர் அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.ஆனால் சர்க்கஸ் நிறுவனம் முறையான அனுமதி பெறாமல் காட்சிகளை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் சர்க்கஸ் கொட்டகையை மூடி சீல் வைத்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சர்க்கஸ் காண ஆர்வமுடன் வந்த ஏராளமான ரசிகர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.