கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதை கண்டித்து மாநகராட்சி கவுன்சிலர் சாலை மறியல்
கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதை கண்டித்து மாநகராட்சி கவுன்சிலர் சாலை மறியல் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு.வின் 9-வது மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் கரூரில் நடைபெற்றது. இதற்காக கரூர் பஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் சி.ஐ.டி.யு.வின் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் கரூர் மாநகர பகுதிகளில் கட்டப்பட்டிருந்த சி.ஐ.டி.யு. கொடிகம்பங்களை போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கரூர் மாநகராட்சி கவுன்சிலரும், சி.ஐ.டி.யு.வின் வரவேற்புக்குழு தலைவருமான தண்டபாணி திடீரென மேற்கு பிரதட்சணம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் தண்டபாணியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சமாதானம் அடைந்த கவுன்சிலர் தண்டபாணி சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.