நாயை வெட்டிக் கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது
ஆரல்வாய்மொழி அருகே நாயை வெட்டிக் கொன்ற பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே நாயை வெட்டிக் கொன்ற பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து குரைத்த நாய்
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் மரப்பாலம் பி.சி.காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 41), கொத்தனார். இவருடைய மனைவி ரூபா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் வீட்டின் பாதுகாப்புக்கு ஒரு நாயை வளர்த்து வந்தனர். இந்த நாயை இரவு நேரத்தில் வீட்டு முன்பு சங்கிலியால் கட்டிப் போடுவது வழக்கமாம்.
அதே தெருவை சேர்ந்தவர் மதுரை வீரன் (39). இவர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக உள்ளார். மதுரை வீரனை பார்த்து ஜஸ்டின் வீட்டு நாய் தொடர்ந்து குரைத்து வந்துள்ளது. இதுதொடர்பாக ஜஸ்டினை, மதுரை வீரன் எச்சரித்துள்ளார். இனிமேல் இதுபோன்று நடந்தால் நடப்பதே வேறு என கூறியுள்ளார்.
வெட்டிக் கொன்றவர் கைது
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நாய் குரைக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. உடனே ஜஸ்டின் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சிலர் அந்த வழியாக வேலைக்காக சென்றுள்ளனர். பின்னர் ஜஸ்டின் வீட்டுக்குள் தூங்க சென்று விட்டார்.
தொடர்ந்து 5.30 மணிக்கு தூக்கத்தில் இருந்து கண் விழித்த அவர் நாயை குளிப்பாட்ட வெளியே வந்தார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயத்துடன் நாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது. பாசமாக வளர்த்த நாய், தங்கள் கண்முன்னே இறந்து கிடப்பதை பார்த்து ஜஸ்டின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், அதிகாலையில் தொடர்ந்து நாய் குரைத்ததால் அந்த நாயை மதுரை வீரன் அரிவாளால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.