விபத்துகளில் மாநகராட்சி ஊழியர்-வாலிபர் பலி
விபத்துகளில் மாநகராட்சி ஊழியர்-வாலிபர் உயிரிழந்தனர்.
லால்குடி:
தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
திருச்சி மேலகொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த சப்பாணியின் மகன் வினோத்குமார்(வயது 33). இவர் நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று, அரியலூர் மாவட்டம் மேலப்பழூரில் நடந்த தனது அண்ணன் மகனின் பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடியை அடுத்த பெருவளநல்லூர் பிரிவு ரோடு அருகே வந்த போது, வினோத்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாவு
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (53). இவர் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி செந்தண்ணீர்புரம் மேம்பாலம் அருகே மொபட்டில் சிவக்குமார் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.