மின் கட்டணம்- கியாஸ் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ.க.- தி.மு.க. வெளிநடப்பு; சத்தி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
மின் கட்டணம்- கியாஸ் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ.க.- தி.மு.க. வெளிநடப்பு; சத்தி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் சரவணக்குமார், துணைத்தலைவர் ஆர்.நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி பொறியாளர் ரவி, சுகாதார அலுவலர் சக்திவேல், உதவி பொறியாளர் சாகுல் ஹமீது, மேலாளர் நாகராஜ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் லட்சுமணன் தலைமையில் மொத்தம் 4 பேரும், பா.ஜ.க கவுன்சிலர்கள் 2 பேரும் எழுந்து நின்று தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என கூறிவிட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். இதேபோல் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர் வேலுச்சாமி வெளிநடப்பு செய்தார். பின்னர் அந்தந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் நகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.