பழனியில் ஜிகா குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; கவுன்சிலர்கள் கோரிக்கை
பழனியில் ஜிகா குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி நகராட்சி கூட்டம் இன்று அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கந்தசாமி, ஆணையர் கமலா, பொறியாளர் வெற்றிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திட்ட பணிகள், மக்கள் குறைதீர்க்கும் மையத்துக்கு செலவினத்தொகை வழங்குவது என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கவுன்சிலர்கள் பேசும்போது, நகர் பகுதியில் ஜிகா குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் திட்டப்பணிகள் முடியாததால் பல இடங்களில் பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், கழிவுநீர் தேங்குவதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் தெருவிளக்கு எரியவில்லை என்றாலும், குடிநீர் குழாய் கசிவு ஏற்பட்டாலும் ஒப்பந்ததாரர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகின்றனர் என முறையிட்டனர். அதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் பேசும்போது, குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க போதிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்றால் நில உரிமையாளர்களுக்கு அவற்றை அகற்ற நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
முன்னதாக பழனியில் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பான கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது திட்ட அறிக்கை மற்றும் எவ்வாறு செயல்படுத்துவது? என்பது குறித்து தனியார் நிறுவனம் மூலம் விளக்கப்பட்டது. இதில் நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.