பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற ஆசாமி


பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற ஆசாமி
x
திருப்பூர்


அவினாசியில் கடை முன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொன்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். அந்த பெண் கற்பழிக்கப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரத்த வெள்ளத்தில் பெண் பிணம்

திருப்பூர் மாவட்டம் அவினாசி-மங்கலம் ரோடு பைபாஸ் அருகே மழைநீர் வடிகால் ஓரம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக அவினாசி ேபாலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டனர். அப்போது அவருடைய தலை கல்லால் தாக்கப்பட்டு உடைந்து இருந்தது. மேலும் அந்த பெண் உடல் கிடந்த இடத்தில் இருந்து அந்த பகுதியில் உள்ள எலெக்ட்ரிக்கல் கடை வாசல் வரை ரத்தக்கறை படிந்து இருந்தது.

இதையடுத்து அந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த ஆசாமி, அந்த பெண்ணின் உடலை அங்கிருந்து தரதர வென்று இழுத்து வந்து சாக்கடை கால்வாய் ஓரம் போட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதையடுத்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், ஆங்காங்கே சுற்றி திரிந்து சாலையோரம் படுத்துக்கொள்வார் என்றும் தெரியவந்தது. இதற்கிடையில் எலெக்ட்ரிக்கல் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொலையாளியின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

ெகாடூரக்கொலை

அதில் நேற்றுமுன்தினம் இரவு பூட்டியிருந்த எலெக்ட்ரிக்கல் கடை வாசலில் அந்த பெண் தூங்குவதும், நள்ளிரவு நேரத்தில் பதுங்கியபடி தலையில் துணியை சுற்றியவாறு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் அங்கு வருவதும், பின்னர் அந்த ஆசாமி அருகில் இருந்த கல்லை தூக்கி வந்து அப்பெண்ணின் தலையில் கொடூரமாக போடுவதும், பின்னர் அந்த இடத்திலிருந்து சென்று விடுவதும் பதிவாகி உள்ளது.

பின்னர் அந்த ஆசாமி சிறிது நேரம் கழித்து அங்கு வந்து இறந்து கிடந்த பெண்ணின் காலை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு சாலையை கடந்து மறுபுறம் புதர் மறைவில் இருந்த நெடுஞ்சாலை மழைநீர் வடிகால் பாதைக்கு செல்வதும், சுமார் அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் எலெக்ட்ரிக்கல் கடை முன் வந்து வேவு பார்த்துவிட்டு அங்கு அந்தப் பெண் வைத்திருந்த குடிநீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்த வழியே செல்வதும் பதிவாகி உள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. அதன் பின்னர் தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

கற்பழிப்பா?

இதையடுத்து பெண்ணை கொடூரமாக கொன்ற கொலையாளி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த பெண் கற்பழிக்கப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என்று போலீசார் கூறினர். பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யும் பதைபதைக்க வைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையில் கொலை நடந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனம் ஒன்று கடந்து சென்றுள்ளது. இதையடுத்து அந்த இருசக்கர வாகன பதிவு எண்ணை கொண்டு அதில் சென்றவர் யார்? என்று போலீசார் விசாரித்தபோது அவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் என்று தெரியவந்தது. ஆனால் அந்த டிரைவர் விபத்தில் சிக்கி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story