மூதாட்டியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது


மூதாட்டியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது
x
திருப்பூர்


திருப்பூரில் மூதாட்டியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை, ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தூக்கில் தொங்கினார்

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் ஸ்ரீனிவாசா நகரைச்சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவருடைய மனைவி முத்துலட்சுமி (62). இவர்களுடைய மகன்கள் அருண்குமார், ஜீவானந்தம். இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். மாலை 6 மணிக்கு கோபால் வீட்டிற்கு வந்தபோது அவருடைய வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது படுக்கையறை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துலட்சுமி காணப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த கோபால் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கொலை-கொள்ளை

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் 15 வேலம்பாளையம் போலீசார் விரைந்து வந்து முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முத்துலட்சுமி கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்தகொண்ட மர்ம கும்பல், அவரை துணியால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்ெகாண்டனர்.

3 பேர் கைது

இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பூர் ஈஸ்வரன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (24), திருப்பூர் நல்லூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த அமரன் (20), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த தினேஷ்குமார் (27) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சத்து 82 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

எலக்ட்ரிக்கல் வேலை

மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட முத்துலட்சுமி வீட்டில் அருண்குமார் கடந்த 1 வாரமாக எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உதவியாக அமரன் இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் கோபாலும், முத்துலட்சுமியும் பேசிக்கொண்டிருந்ததை இருவரும் கேட்டுள்ளனர். இதன்படி இடம் விற்ற பணம் கோபால் வீட்டில் இருந்ததை இருவரும் தெரிந்துகொண்டனர்.

முத்துலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதையும் அவர்கள் உறுதி செய்தனர். இதை வாய்ப்பாக பயன்படுத்திய அருண்குமார், அமரன் மற்றும் தினேஷ்குமாரும் சேர்ந்து சம்பவத்தன்று முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, போலீசாரை திசை திருப்புவதற்காக மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு சென்றுள்ளனர். மேலும் மோப்பநாய் தங்களை பிடித்து விடக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.

செல்போன் டவர் மூலம்

இதையடுத்து வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அபினவ்குமார் மேற்பார்வையில், கொங்குநகர் சரக உதவி கமிஷனர் அனில்குமார், அனுப்பர்பாளையம் சரக உதவி கமிஷனர் நல்லசிவம் ஆகியோர் தலைமையில் புலன் விசாரணை நடத்தியதில், முத்துலட்சுமி வீட்டில் வேலை செய்த அருண்குமார், அமரன் மற்றும் அவர்களுடைய நண்பர் தினேஷ்குமார் ஆகியோர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து அவர்களுடைய செல்போன் டவரை கண்காணித்தபோது, 3 பேர் கொடுமுடியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு சென்று விடுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் பிடித்து அழைத்து வந்தனர்.

12 மணிநேரத்தில் கைது

பெண் கொலை செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட உதவி கமிஷனர்கள் அனில்குமார், நல்லசிவம், 15 வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகர், நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் மற்றும் போலீசார் ஜெயக்குமார், முருகானந்தம், ரமேஷ்குமார், கார்த்திகேயன், பிரபு, பழனிச்செல்வம், மணிகண்டபிரபு, மணிகண்டன், முத்துப்பாண்டி, சக்திவேல் உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பிரபாகரன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.


Next Story