நெஞ்சை பதறவைக்கும் கொலைகளில் துப்பு துலங்காத மர்மம்


நெஞ்சை பதறவைக்கும்   கொலைகளில் துப்பு துலங்காத மர்மம்
x
திருப்பூர்

திருப்பூர்,:

அமைதியே ஆனந்த வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்கு அச்சமற்ற பாதுகாப்பு அவசியம். ஆனாலும் பூவுக்குள் பூநாகம் இருப்பது போல், நந்தவனத்தில் நாகப்பாம்பு உலவுவதுபோல், விஷத்தை வேரில் செலுத்த சில விஷமிகள் விபரீத புத்தியுடன் வலம் வருவது வாடிக்கை. அவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன்பு நிறுத்துவதே காவல்துறையின் கடமை. அதை அவர்கள் கண்ணும் கருத்துமாய் கச்சிதமாய் செய்வதால் மக்களும் மகிழ்ச்சி பொங்க வாழ்கிறார்கள். ஆனாலும் சில கொடூர கொலைகளில் துப்பு துலங்குவதில் கால தாமதம் ஏற்படுவது கவலை கொள்ள செய்கிறது...

20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அங்குள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்த மூத்த தம்பதி சந்தோசமாக தங்கள் வாழ்க்கையை நடத்தினார்கள். பசுமாடுகளை வைத்து பால் கறந்து தினமும் விற்பனை செய்து வந்தனர். இயற்கையோடு இணைந்து நிம்மதியை வாழ்ந்து வந்தவர்களின் வாழ்க்கை ஒருநாள் இரவில் நிர்மூலமாகி போய்விட்டது. கொலையாளியின் கூரிய வெட்டுக்கத்தியின் முனை... அரிவாள் முனை... கசாப்பு தொழிலை விட கர்ண கொடூரமாக மாறி கதற...கதற... கழுத்தை அறுத்து காரியத்தை கச்சிதமாக முடித்த கதை...சினிமாவை மிஞ்சியது.

காங்கயம் தம்மரெட்டிப்பாளையம் ரங்காம்பாளையத்தில் தான் 20 ஏக்கர் விவசாய பூமியில் அந்த வீடு இருந்தது. அங்கு பழனிச்சாமி (வயது 72), அவரது மனைவி வள்ளியம்மாளும் (68) வசித்து வந்தனர். இவர்களுடைய மகன் திருமணம் முடிந்து திருப்பூரில் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். மகளுக்கு திருமணம் முடிந்து நத்தக்காடையூரில் வசித்து வருகிறார்.

தம்பதியர், தோட்டத்து வீட்டில் வசித்தனர். தினமும் அதிகாலையில் எழுந்து பசுமாடுகளில் இருந்து பால் கறந்து அவற்றை கேனில் நிரப்பி தோட்டத்தின் கம்பி வேலிக்கு வெளியே பழனிச்சாமி வைத்து விடுவது வழக்கம். அப்பகுதியை சேர்ந்த பால்காரர் வந்து கேனை எடுத்து சென்று விடுவார்.

தம்பதி கொடூர கொலை

ஆம். அந்த தம்பதி அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வேலைகளை கவனிக்க தொடங்கி விடுவார்கள். அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் தான் அன்றைய இரவு பொழுது கொடூரமாக முடிந்து விட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி அதிகாலை வேளை... பால்காரர் வழக்கம் போல் தோட்டத்துக்கு வெளியே பால் கேனை பார்த்தார். காணவில்லை. பழனிச்சாமியை அழைத்துள்ளார். எந்தவித பதிலும் இல்லை. சந்தேகம் ஏற்பட பால்காரர் தோட்டத்துக்குள் நுழைந்து பழனிச்சாமியின் வீட்டுக்குள் பார்த்துள்ளார். ஆனால் அங்கு கண்ட காட்சியால் அலறிப்போனார்.

பழனிச்சாமியும், வள்ளியம்மாளும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர். இருவரின் முகம் மற்றும் தலையில் கத்தியால் குத்திய காயமும், அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட காயமும் அலங்கோலமாய் காட்சியளித்தன. நைலான் கயிறு கொண்டு கழுத்தை இறுக்கிய நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மூத்த தம்பதியை இவ்வாறு மூர்க்கத்தனமாக கொலையாளி கொலை செய்து விட்டு தப்பிவிட்டான்.

துப்பு துலங்கவில்லை

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள்.

வள்ளியம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அணிந்திருந்த தங்க கம்மல் அப்படியே இருந்தது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தடயவியல் நிபுணர்ளும் வந்து கைரேகையை பதிவு செய்தனர். 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கயம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோட்டத்துக்கு அருகில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டபோதிலும் எந்தவித துப்பும் கிடைக்காமல் உள்ளது.

சம்பவம் நடைபெற்று 6 மாதம் நெருங்கிவிட்ட நிலையில் கொலையாளி பற்றி துப்பு துலங்காமல் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

பள்ளி மாணவி கொலை

முதிய தம்பதி கொலை சம்பவம் முடிவு காணப்படாத நிலையில் பள்ளி மாணவியின் கொலையிலும் துப்பு துலங்காமல் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

ஆம். உடுமலை காந்தி சவுக் பத்ரகாளியம்மன் லே அவுட்டை சேர்ந்தவர் சண்முகராஜ். தனியார் கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக உள்ளார். இவருடைய மனைவி கற்பகவள்ளி. டெய்லராக உள்ளார். இவர்களுடைய மகள் ஹர்த்திகா ராஜ் (17). அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி பெற்றோர் வேலைக்கு சென்று விட வீட்டில் ஹர்த்திகா ராஜ் மட்டும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் மாலையில் வீடு திரும்பிய பெற்றோர் வீட்டுக்குள் மகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். கதறித்துடித்த அவர்கள் மகளைமீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆசையாய் வளர்த்த மகள் அவர்களை விட்டு பிரிந்தார். மகளை சடலமாய் பார்த்த பெற்றோர் மனம் வெடித்து கதறினார்கள்.

கொலையாளிகள் யார்?

இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தாலும் இதுவரை துப்பு துலங்கவில்லை. கொலை சம்பவம் நடந்த அன்று இரவு அந்த பகுதியில் போலீசார் வஜ்ரா வாகனங்களை நிறுத்தி அதிகப்படியான போலீசாரை குவித்து விசாரித்தனர். ஆனால் அதற்கு பிறகு இந்த வழக்கில் போலீசார் ஆர்வம் காட்டாமல் விட்டுவிட்டனர். மாணவியை கொன்றது யார்? என்ற கேள்வி அப்பகுதி மக்களிடம் அதிகமாகவே நிலவி வருகிறது. மாணவியின் பெற்றோரையே சம்பந்தப்படுத்தி பேச்சு அடிபட அவர்கள் மனம் நொந்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

தங்கள் மகள் கொலைக்கு காரணமானவர்களை கண்டறிய வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மர்ம முடிச்சுகள் இதுவரை அவிழாமல் உள்ளது. போலீசாருக்கு சவால் விட்டுள்ள இந்த கொலை சம்பவங்களில் துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்தால் தான் மக்களிடம் நம்பிக்கை நீடிக்கும். அச்ச உணர்வு அகலும். அதை காவல்துறை கையாண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story