ஓசி பீடி தராதவரை சுத்தியலால் அடித்துக்கொன்ற கொத்தனார்


ஓசி பீடி தராதவரை சுத்தியலால் அடித்துக்கொன்ற கொத்தனார்
x

ஓசி பீடி கொடுக்காதவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

மதுரை


ஓசி பீடி கொடுக்காதவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

அடித்து கொலை

மதுரை ஜெய்நகரில் தனியார் பள்ளிக்கூடம் அருகே முதியவர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு முதியவர் இரும்பு ஆயுதங்களால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும் விசாரணையில், இறந்து கிடந்தது மகபூப்பாளையத்தை சேர்ந்த அய்யனார் (வயது 60) என்பதும், அவர் பொன்மேனி சுடுகாட்டில் மயான தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

கொத்தனார் சிக்கினார்

இதற்கிடையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் அய்யனார் அந்த பகுதியில் நடந்து வருவதும், அப்போது வாலிபர் ஒருவர் அவரிடம் தகராறு செய்ததும், அந்த நபர் அருகில் கிடந்த சுத்தியலால் தலை, முகத்தில் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது.

அய்யனாரை தாக்கிய வாலிபர், பொன்மேனி பகுதியை சேர்ந்த கொத்தனார் கணேசன் (28) என்பது உறுதி செய்யப்பட்டு, அவரது வீட்டிற்கு சென்று அவரை மடக்கி பிடித்தனர். விசாரித்ததில், ஓசி பீடி கொடுக்காததால், ஏற்பட்ட தகராறில் சுத்தியலால் அய்யனாரை அடித்துக்கொன்றது அவர்தான் என தெரியவந்தது. இதையடுத்து கணேசன் கைது செய்யப்பட்டார்.

ஓசி பீடிக்காக முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story