கை, கால் நரம்புகளை துண்டித்து தலைமை ஆசிரியை கொடூர கொலை
கை, கால் நரம்புகளை துண்டித்தும், பல்வேறு இடங்களில் வெட்டியும் தலைமை ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ெதாடர்புடைய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
திருப்பத்தூர்,
கை, கால் நரம்புகளை துண்டித்தும், பல்வேறு இடங்களில் வெட்டியும் தலைமை ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ெதாடர்புடைய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தலைமை ஆசிரியை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகரை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது52). இவர் தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் ராஜேந்திரன். சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவர்களுடைய மகன் அம்பேத்கர் பாரதி. கோவை மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். மகள் அபிமதி பாரதி. இவருக்கு திருமணமாகிவிட்டது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். எனவே தலைமை ஆசிரியை ரஞ்சிதம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
பள்ளிக்கு வரவில்லை
நேற்று அவர் பள்ளிக்கு செல்லவில்லை. எனவே சக ஆசிரியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.
நீண்டநேரம் போன் செய்தும் ரஞ்சிதம் எடுத்து பேசாததால், சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் அவரது வீட்டுக்குச்் சென்று பார்த்தனர். அப்போது, முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டின் உள்ளே டி.வி. நிகழ்ச்சிகள் ஓடிய சத்தம் கேட்டது.
எனவே பின்புறம் வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கை, கால்களில் நரம்புகளை துண்டித்தும், வெட்டுக்காயங்களுடனும் ரத்த வெள்ளத்தில் ரஞ்சிதம் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், உடனே திருப்பத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, கொடூரமாக ரஞ்சிதம் கொலை செய்யப்பட்டதும், அவரது அலறல் வெளியில் கேட்காமல் இருக்க டி.வி.யை சத்தமாக கொலையாளிகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள், சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடந்தது. தலைமை ஆசிரியை அணிந்திருந்த தங்க நகை மற்றும் வளையல்கள் கொள்ளை போனது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால், இதை தெரிந்திருந்த கொலையாளிகள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கை வீட்டில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
பரபரப்பு
இந்த கொலை குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூர் பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் யார்? என்பதை நோட்டமிட்டு, கொடூர செயல்கள் அரங்கேறுகி்ன்றன.
திருப்பத்தூர் புது தெரு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார். அதேபோல் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள நெய்வாசல் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் தலைமை ஆசிரியையும் கொல்லப்பட்டுள்ளார்.
எனவே கொலையாளிகளை விரைந்து பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.