பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட ஊராட்சி டேங்க் ஆபரேட்டர் பலி-கைதான தாய்-மகள் மீது கொலை வழக்கு பதிவு


தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட ஊராட்சி டேங்க் ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவரை தீ வைத்து எரித்ததாக கைதான தாய்-மகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஊராட்சி டேங்க் ஆபரேட்டர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டியை சேர்ந்தவர் பச்சமுத்து. இவருடைய மகன் சிவசங்கர் (வயது 32). இவர் சின்னப்பனஅள்ளி ஊராட்சியில் தினக்கூலி அடிப்படையில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மனைவி சஞ்சீவி (55), மகள் லட்சுமி பிரியா (30).

இந்தநிலையில் மாசிலாமணி மனைவி சஞ்சீவி, ஊராட்சி ஆபரேட்டர் சிவசங்கர் வீடு முன்பு விறகுகளை கொட்டி வைத்திருந்தார். கடந்த 22-ந் தேதி சிவசங்கர் விறகுகளை அகற்ற கூறினார். இதனால் சஞ்சீவி, இவருடைய மகள் லட்சுமி பிரியா மற்றும் சிவசங்கர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சஞ்சீவி, லட்சுமி பிரியா ஆகியோர் சிவசங்கர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் சிவசங்கர் 90 சதவீத தீக்காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடல் கருகிய சிவசங்கரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது விறகை அகற்ற சொன்னபோது ஏற்பட்ட தகராறில் சஞ்சீவி, லட்சுமி பிரியா ஆகியோர் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சிவசங்கர் தெரிவித்தார்.

கொலை வழக்கு பதிவு

இதுதொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிவசங்கரை தீ வைத்து எரித்த சஞ்சீவி, லட்சுமி பிரியா ஆகியோரை கடந்த 23-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சஞ்சீவி, லட்சுமி பிரியா மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றினர்.

விறகை அகற்ற சொன்ன தகராறில் ஊராட்சி டேங்க் ஆபரேட்டரை தாய்-மகள் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story