பாகலூர் அருகே பயங்கரம் தலை துண்டித்து வாலிபர் கொலை-கை, கால்களை வெட்டி உடலை ஏரியில் வீசிய கொடூரம்


பாகலூர் அருகே பயங்கரம் தலை துண்டித்து வாலிபர் கொலை-கை, கால்களை வெட்டி உடலை ஏரியில் வீசிய கொடூரம்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

பாகலூர் அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரின் கை, கால்களை வெட்டி உடலை ஏரியில் வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆண் பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக தற்போது இந்த ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை ஏரியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் ஒன்று மிதந்தது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்த அந்த உடலை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் பாகலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஏரியில் மிதந்த உடலை மீட்டனர். அப்போது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதும், கை மற்றும் கால்களை வெட்டி வீசியதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் அந்த உடலை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கொலை நடந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனால் வேறு பகுதியில் கொலை நடந்தது உறுதியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், மரம் அறுக்கும் எந்திரத்தால் தலை மற்றும் கை, கால்களை துண்டித்து கொலை செய்து விட்டு, உடலை மட்டும் ஏரியில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

யார் அவர்?

ஆனால் கொலை செய்யப்பட்ட வாலிபரின் தலை கிடைத்தால் தான் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்கள் தெரியவரும் என்றனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த பயங்கர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாகலூர் அருகே தலை துண்டித்து வாலிபரை கொலை செய்து, உடலை ஏரியில் வீசி சென்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story