பெண்ணை அடித்துக் கொலை செய்த மர்ம ஆசாமி


பெண்ணை அடித்துக் கொலை செய்த மர்ம ஆசாமி
x

உடுமலை அருகே பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர்

உடுமலை அருகே பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பஸ் நிறுத்தத்தில் பெண் பிணம்

உடுமலையை அடுத்த புக்குளம் நடராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தனா என்கிற தனலட்சுமி (வயது 40). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. தனலட்சுமி அடிக்கடி புக்குளம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் படுத்து தூங்கிவந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பஸ் நிறுத்தத்தில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதனை பார்த்தவர்கள் உடுமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தனலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும் சம்பவ இடத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மற்றும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். திருப்பூரிலிருந்து போலீஸ் மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தபடி ரோட்டின் இருபுறமும் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

அத்துடன் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அதிர்ச்சி

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, தனிப்படை அமைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரம் குடிமங்கலத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் மாடு மேய்க்க சென்ற பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த படுகொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தீவிரமாக தேடிவருகிறார்கள்.


Related Tags :
Next Story