ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட, ஓட வெட்டிக்கொலை


ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட, ஓட வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 26 Dec 2022 12:30 AM IST (Updated: 26 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட, ஓட அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

சீர்காழி அருகே ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட, ஓட அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் ரெட் தினேஷ் என்கிற தினேஷ் (வயது27). கஞ்சா மற்றும் சாராய வியாபாரியான இவர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சிறையில் இருந்த தினேஷ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் தினேஷ் நேற்று இரவு கோவில்பத்து பள்ளிக்கூடம் அருகே நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை கொண்ட கும்பல் அரிவாளால் தினேஷை ஓட, ஓட சரமாரியாக வெட்டினர். இதில் கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இந்த நிலையில் தினேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட ரவுடி தினேஷ் மீது சீர்காழி, புதுப்பட்டினம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story