தர்மபுரி அருகே வரப்பு தகராறில் தாய்-மகன் வெட்டிக்கொலை-விவசாயி வெறிச்செயல்
தர்மபுரி:
தர்மபுரி அருகே வரப்பு தகராறில் தாய்-மகன் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வரப்பு தகராறு
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஒன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தின் அருகில் மற்றொரு விவசாய நிலம் உள்ளது.
இதனிடையே அருகருகே உள்ள விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமிக்கும் (50) இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் அடிக்கடி அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
தாய்-மகன் கொலை
இந்தநிலையில் நேற்று ராஜமாணிக்கம் தனது விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டார். அவருடன் தாயார் பழனியம்மாளும் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெரியசாமி வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜமாணிக்கம், அவருடைய தாயார் பழனியம்மாள் ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர்் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜமாணிக்கம், பழனியம்மாள் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய பெரியசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். வரப்பு தகராறில் தாய்-மகன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.