தேவகோட்டை அருகே தாய்-மகளை கொன்ற கொள்ளையர்கள்-உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு


தேவகோட்டை அருகே தாய்-மகளை கொன்ற கொள்ளையர்கள்-உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருேக கொள்ளையர்களால் கொல்லப்பட்ட தாய்-மகளின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை அருேக கொள்ளையர்களால் கொல்லப்பட்ட தாய்-மகளின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரட்டைக்கொலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா. இவர் இறந்துவிட்டார். இவருடைய மனைவி கனகம் (வயது 65). இவர்களுக்கு 3 மகள்கள். பாலு என்ற மகனும் உள்ளார். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

இவருடைய மூத்த மகள் வழி பேத்திக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்த நிலையில் திருமண விழாவுக்கு நகைகள் வாங்கி கனகம் வீட்டில் வைத்திருந்தனர்.

கடந்த 10-ந் தேதி இரவில் கனகம், அவருடைய 3-வது மகள் வேலுமதி (35), இவருடைய 12 வயது மகன் மூவரசு ஆகியோர் மட்டும் கனகம் வீட்டில் இருந்தனர்.

மறுநாள் அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் கொள்ளை கும்பல் புகுந்தது. இந்த சத்தம் கேட்டு எழுந்த வேலுமதியின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்ததுடன் அவரது தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியும் அரிவாளால் வெட்டியும் கொள்ளையர்கள் கொன்றனர். மேலும் கனகமும், பேரன் மூவரசும் அரிவாள் வெட்டுக்காயம் அடைந்தனர். பின்னர் அந்த கும்பல் திருமணத்துக்காக வைத்திருந்த 60 பவுன் நகைகள் மற்றும் குடங்கள், தட்டு உள்ளிட்ட வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

மேலும் ஒருவர் சாவு

பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து வந்து பாட்டி, பேரனை மீட்டு தேவகோட்டையில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் இரவில் கனகம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய பேரன் மூவரசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கனகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே வேலுமதியின் உடல் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெரும் பரபரப்பை இந்த இரட்டைக்கொலை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம்

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கனகத்தின் உறவினர்களும், அவரது ஊரை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை 2 பேரின் உடல்களையும் வாங்கமாட்டோம் என தெரிவித்து கனகத்தின் வீட்டின் முன்பும், ஆஸ்பத்திரியிலும் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சி சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கனகத்தின் மகன் பாலு வெளிநாட்டிலிருந்து வந்து கொண்டிருப்பதால் அவர் வந்த பிறகு முடிவு செய்யலாம் என உறவினர்கள் கூறிவிட்டனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Related Tags :
Next Story