காதல் மனைவியை குத்திக்கொன்ற கணவன்


ஊத்துக்குளி அருகே குழந்தைகள் கண் எதிரே காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

ஊத்துக்குளி அருகே குழந்தைகள் கண் எதிரே காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல் மனைவி

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவர் மாயார் பகுதியைச் சேர்ந்த சுஜாதா (28) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்திகா (8) என்ற மகளும், ரிதனிக் (7) என்ற மகனும் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் சிட்கோ வட்டக்காட்டுப்புதூர் பகுதியில் குடியேறினார். அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சுஜாதாவும் அருகில் உள்ள குடோனில் வேலைக்கு சென்று வந்துள்ளார். குழந்தைகள் இருவரும் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக ஊத்துக்குளி பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன் தனது மனைவி, குழந்தைகளை பார்க்க வட்டக்காட்டுப்புதூருக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தைகள் மற்றும் சுஜாதாவின் தாயார் மாதேவி (48) ஆகியோர் அங்கு இருந்தனர்.

கத்தியால் குத்தி கொலை

வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுஜாதாவின் வயிற்றில் குத்தினார். இதை தடுக்க வந்த சுஜாதாவின் தாயார் மாதேவிக்கும் முதுகில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சுஜாதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த குழந்தைகள் கதறி அழுதனர்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜாதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதல் மனைவியை பெற்ற குழந்தைகள் கண்ணெதிரே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story