கல்லாவி அருகே சோகம்போட்டி தேர்வுகளில் தொடர் தோல்வியால் விபரீதம்:மாத்திரைகளை கரைத்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்தானும் தூக்குப்போட்டு தற்கொலை


கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

அரசு போட்டி தேர்வுகளில் தொடர் தோல்விகளால் மனமுடைந்த முதுகலை பட்டதாரி பெண், தனது 2 குழந்தைகளுக்கு மாத்திரைகளை கரைத்து கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லாவி அருகே ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதுகலை பட்டதாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே கோழிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வா (30). இவர்களுக்கு இனியா (8) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் (4) என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில் தெய்வா தனது குழந்தைகளுடன் கோழிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். இவர்களுடைய வீட்டின் அருகே மாமனார் ஆறுமுகம் (58) அவருடைய மனைவியுடன் தனியாக வசித்து வருகின்றனர். எம்.எஸ்சி. முதுகலை கணித பட்டதாரியான தெய்வா அரசு பணிக்காக போட்டி தேர்வுகளுக்கு படித்து வந்தார்.

விபரீத முடிவு

இதற்காக பல்வேறு அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்ற தெய்வா தொடர் தோல்விகளை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த தெய்வா தொடர் தோல்விகள் குறித்து தனது மாமனாரிடம் கூறி கவலை அடைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த தெய்வா வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். மேலும் தான் இறந்து விட்டால் குழந்தைகள் அனாதை ஆகி விடுவார்களே என்று குழப்பம் அடைந்த அவர் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ளும் கொடூர முடிவெடுத்தார்.

உடனே அவர் வீட்டில் இருந்த அளவுக்கதிமான மாத்திரைகளை தனது 2 குழந்தைகளுக்கும் கரைத்து கொடுத்து விட்டார். சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் வாயில் நுரைதள்ளி இறந்தனர். அதன்பிறகு தெய்வா வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சோகம்

இதையடுத்து வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர் தாய், மகன், மகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கல்லாவி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தெய்வாவின் தாயார் பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெய்வா குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான மாத்திரைகளை கொடுத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும் தற்கொலை செய்து கொண்ட தெய்வாவிற்கும், மாமனார் ஆறுமுகத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் அதில் மனமுடைந்து தெய்வா இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

2 குழந்தைகளுக்கு மாத்திரை கரைத்து கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story