கிருஷ்ணகிரியில் பயங்கரம்: வாலிபரை கொன்று உடல் எரிப்பு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வாலிபரை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாலிபர் கொலை
கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலை மீது நேற்று காலை சிலர் நடைபயிற்சி சென்றனர். அப்போது எரிந்த நிலையில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் கிடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் குப்தாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மலைக்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கிருந்த தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் கொலை செய்து, எரிக்கப்பட்டது தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மலைக்கு அழைத்து வந்து, கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசார் விசாரணை
ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையானவர் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களில் வாலிபர்கள் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரை கொலை செய்து, எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மலை மீது வாலிபர் கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.